எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
எரிபொருளில் கலக்கப்பட்டதாக கூறப்படும் சூழல் மாத்திரை தொடர்பில் சமூக
ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Eco Tablet எனப்படும் மாத்திரை எரிபொருளுடன் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மறுப்பு
இருப்பினும் அத்தகைய மாத்திரை (Eco Tablet) சந்தையில் இருப்பதாகவும், சிபெட்கோவின் எரிபொருளுடன் அதனை கலப்பதற்கு எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆலோசனையையும் அல்லது ஒப்புதலையும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையானது பெட்ரோலின் ஒக்டேன் எண்ணை அதிகரித்து எரிபொருளில் உள்ள கந்தகத்தின் அளவைக் குறைப்பதுடன் எரிபொருளின் செயல்திறனை மேம்படுத்தும் என பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபுகஸ்கந்த மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் காணப்படும் எரிபொருள் ஆய்வு கூடங்களில் எரிபொருட்களின் தரம் உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது கப்பல்களுக்கு ஏற்றப்படும் முன்னரும், இலங்கையில் இறக்கப்படுவதற்கு முன்னரும் தரம் குறித்து பரிசோதனை செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.