எரிபொருள் வரிசையில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி அம்பலம்!
இலங்கையில் கடுமையாக எரிபொருள் தட்டுபாடு நிலவியுள்ள நிலையில், எரிபொருள் நிலையங்களில் மோசடி சம்பவமொன்று இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
உள்நாட்டு எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், நாட்டில் தற்போது 4.6 மில்லியனுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் எரிவாயு சிலிண்டரை வாங்குவதற்கு மக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கும் நிலையில்,எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்களை பராமரிக்கும் பணியில் மோசடி குழுவொன்று ஈடுபட்டுள்ளது.
நாளொன்றுக்கு வசூலிக்கப்படும் பணம்
இந்த மோசடி குழு வீட்டு எரிவாயு சிலிண்டரை வரிசையில் பாதுகாத்துக்கொள்ள நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் மூலம் வீட்டு எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு சில நுகர்வோர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பணம் செலுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் சரியான திகதியை அறிவிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.