கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு நிலைமைகளை தொடர்ந்து பேணவும், உணவு பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் செயற்பட அனைத்து தரப்பினது ஒத்துழைப்பும் அவசியம் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு உற்பத்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் விதத்தில் அரசாங்கத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்ற உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தினையும் கரிசனையோடு முன்னெடுக்க அனைத்து திணைக்கள தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இதுவரை எமது மாவட்டத்தில் உணவு உற்பத்தி சம்பந்தமான விடயங்களும், போசாக்கு சம்பந்தமான விடயங்களும் பாதிப்புறும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை நாங்கள் உணர்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு
நிலைமைகளை தொடர்ந்து பேணவும் உணவு பாதுகாப்பினை அதாவது பட்டினி என்ற நிலைமை
இல்லாது நமது மாவட்ட மக்கள் அனைவரும் உணவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை
ஏற்படுத்திக் கொடுக்கும்படியான கருத்துத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு
செயல்பட வேண்டும்.
உணவு உற்பத்தி போசாக்கு
குறிப்பாக உணவு உற்பத்தி போசாக்கு சம்பந்தமான விடயங்களில் அதீத அக்கறை கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில்
மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறி மோகன், மேலதிக அரச அதிப ர்( காணி) மற்றும்
நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர்,விவசாய
உதவிபணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் விவசாயிகள் என பலர்
கலந்து கொண்டிருந்தனர்.