சுண்ணாம்புக்கல்லின் விலையை ஏற்றி மக்களின் வீட்டுக்கனவை சிதைக்காதீர்! சுரேஷ் பிரேமச்சந்திரன்
சுண்ணாம்புக்கல்லின் விலையை வரலாறு காணாத அளவிற்கு ஏற்றி மக்களின் வீட்டுக்கனவை சிதைக்காதீர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுண்ணாம்பு கல் விலையேற்றம்
மத்தியதர வகுப்பினரின் சொந்தவீடு கட்டும் கனவை சிதைக்கும் வகையில் செயற்படும் கனிமவள கூட்டுத்தாபனத்தின் சுண்ணாம்பு கல்லுக்கான விலையேற்றத்தைக் கைவிடுமாறும் தேவையானால் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்காக பாவிக்கின்ற சுண்ணாம்புக்கல்லுக்கு உரிமைத் தொகையை அதிகரித்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலத்தில் அரச நிறுவனமான கனிமவள கூட்டத்தாபனத்தினால் ஒரு கியூப் கருங்கல்லுக்கு 240 ரூபாவும், ஒரு கியூப் சுண்ணாம்புக்கல்லுக்கு 140 ரூபாவும் ஒரு கியூப் மணலுக்கு 900 ரூபாவும் உரிமைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கருங்கல், மணல் ஆகியவற்றின் உரிமைத்தொகை அப்படியே இருக்க, யாழ் மாவட்டத்தில் இருந்து அகழப்படும் சுண்ணாம்புக்கல்லுக்கான உரிமைத் தொகையானது ஒரு கியூப்பிற்கு 140ரூபாவிலிருந்து 946 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இந்த விலையேற்றத்திற்கான காரணத்தை கனிமவள கூட்டத்தாபனத்தினர் குறிப்பிடும் பொழுது, சீமெந்து போன்ற உற்பத்தித் தொழிற்சாலைக்குப் பயன்படுவதாகவும் ஆகவேதான் அதன் உரிமைத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகின்றது.ஆனால் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இல்லை.
யாழ்.குடாநாட்டின் கட்டுமானப் பணிகளுக்கு மிகப்பெரும் அளவில் சுண்ணாம்புக்கல்லே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி, யாழ்.குடாநாட்டில் சுண்ணாம்புக்கல்லை அடிப்படையாகக் கொண்ட எந்தத் தொழிற்சாலையும் இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில், சுண்ணாம்புக்கல்லின் உரிமைத் தொகையை பலமடங்கு அதிகரிப்பது என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டுமானப் பணிகளை பாரதூரமாகப் பாதிக்கும் என்பதுடன், வெளியில் இருந்து கொண்டுவரப்படக்கூடிய கருங்கல்லின் விலையும் அதிகரிக்கும்.
கட்டுமானப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஏற்கனவே நாடு மிகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற சமயத்தில் கட்டுமானப் பொருட்கள் அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன், விலைஅதிகரிப்பும் நிலவும் சூழலில், எமது மண்ணில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல்லுக்கான விலையேற்றம் என்பது மக்களை இன்னமும் பலமடங்கு பாதிக்கும் ஒரு செயற்பாடாகும்.
ஒரு சொந்த வீட்டை அமைத்துக்கொள்வதென்பது மத்தியதர வர்க்கத்தின் வாழ்நாள் கனவாகும். அந்தக் கனவைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் கனிமவள கூட்டத்தாபனத்தின் செயற்பாடு அமைந்துவிடக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
குடா நாட்டிற்கு வெளியில் தொழிற்சாலைகளுக்காக சுண்ணாம்புக்கல் கொண்டுசெல்லப்படுமாக இருந்தால், அதற்கான உரிமைத் தொகையை நீங்கள் அதிகரிக்கலாம். ஆனால், குடாநாட்டிற்குள் நடக்கக்கூடிய கட்டுமானப் பணிகளுக்காகப் பெற்றுக்கொள்ளும் சுண்ணாம்புக்கற்களுக்கு அவ்வாறான உரிமைத் தொகையை அறவிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
எனவே, கனிமவள கூட்டத்தாபனத்தினர் மேற்கண்ட பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, பழைய முறையிலேயே அதே விலையிலேயே குடாநாட்டு மக்கள் சுண்ணாம்புக்கல்லைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.