யாழ்ப்பாணமும் முடங்கியது! நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிப்பு (Video)
அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இன்று பாரிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றன.
இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை இன்றைய தினம் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
முழுமையாக முடங்கியது கொழும்பு நகரம் (Video)
யாழ்ப்பாணம்
யாழ்பாணத்திலும் இன்றைய தினம் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைந்தளவிலேயே காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மாணவர்களின் வரவின்மை காரணமாக வவுனியாவில் பாடசாலைகள் பல வெறிச்சோடியுள்ளன.
நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்கள் பலரும் பாடசாலைக்கு சமூகமளிக்காததுடன், மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இருப்பினும் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மணவர்கள் சிலர் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தமையையும், ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா செய்தி - திலீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று காலை முதல் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.
சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தபால் திணைக்களங்களங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செய்திகள் - குமார்
மலையகம்
மலையகத்திலும் இன்று காலை முதல் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹட்டன்
,கொட்டகலை, தலவாக்கலை,நோர்வூட் மஸ்கெலியா உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தில்
உள்ள பிரதான நகரங்கள் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளன.
பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றன.
அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள், மின்சார சபை தொழிற்சங்கங்கள், சுகாதார தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியர்சார் தொழிற்சங்கங்கள், தபால் துறைசார் தொழிற்சங்கங்கள், பொருளாதார மத்திய நிலையங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், வங்கிசார் தொழிற்சங்கங்கள் உட்பட மேலும் பல தொழிற்சங்கங்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
மலையகத்தில் உள்ள பிரதான இரு கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இப்போராட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.
அதேபோல சதொச, எரிபொருள் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவற்றின் முன்னால் நீண்ட வரிசை காணப்பட்டது.
பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தது.
இ.போ.ச. பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டத்துக்கு ஆதரவு
வழங்கியிருந்தனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பணி பகிஷ்கரிப்பும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக அக்கரைப்பற்று பிரதேசத்திலும் அரச வங்கிகள், அரச திணைக்களங்கள், தபால் நிலையங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் சமூகமளிக்காத நிலையில் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
அத்தோடு அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் யாவும் மூடப்பட்டுள்ளமையால் மக்களின் அன்றாட சேவைகளும் தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தபால் சேவைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆயினும் அக்கரைப்பற்று மத்திய பேருந்து போக்குவரத்து நிலையத்திலிருந்து போக்குவரத்து சேவை இடம்பெறுவதுடன், போக்குவரத்து நடவடிக்கையில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் ஈடுபட்டுவருவதையும் அவதானிக்க முடிந்தது.
மன்னார்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் விதமாக மன்னாரில் இன்று அரச வங்கிகள் தபாலகம் உட்படப் பல அலுவலகங்கள் மூடப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகள் பெரும்பாலானவை நடைபெறவில்லை என்பதுடன், சில பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் குறைந்து காணப்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாகக் காணப்பட்டது.
அதே நேரம் பேருந்து சேவைகள் வழமை போல் இடம் பெற்றுவருகின்ற அதே நேரம் வர்த்தக நிலையங்களும் வழமைபோல் இயங்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அரச வங்கிகள் ஊடாகவும் தபால் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சேவைகள் இடை நிறுத்தப்பட்டமையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
