இலங்கை மக்களினது மனித உரிமைகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா தகவல்
இலங்கையில் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீளவும் இடம்பெறுவதனை தடுக்க இலங்கை பொறுப்பு கூற வேண்டும் எனவும், இதற்காக அரசாங்க நிறுவனங்களில் ஆழமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
தேசிய ரீதியான பேச்சுவார்த்தை
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்துச் செல்ல தேசிய ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இலங்கை அரசியல் ரீதியாக முக்கிய ஓர் ஸ்தானத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அனைத்து மக்களினதும் மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
கொடூரமான பாதுகாப்பு சட்டங்களில் தங்கியிருத்தல் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது அடக்குமுறை பிரயோகித்தல் உடன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கடுமையான இராணுவமயமாக்கல்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி மாணவர் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுதல், மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் என்பனவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.
கடுமையான இராணுவமயமாக்கல் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இலங்கை அரசாங்கத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.