நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் வேலை நிறுத்தங்கள் நிறுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொலன்னறு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள், உழைத்துச் சம்பாதித்த பணத்தில், அரச துறையில் உள்ள அனைவருக்கும் சம்பளம் கொடுக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
எனவே, அரச துறையில் இருப்பவர்கள் விவசாயிகளுக்காகவும், தனியார் நிறுவனங்களுக்காகவும் செயற்பட வேண்டிய கடமை உள்ளது.
வேலை நிறுத்தங்களை உலகம் முழுவதும் ஊடகங்கள் காட்டும்போது, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைகின்றது. நாடும் வங்குரோத்து நிலைக்கு செல்லும்.
தற்போது ஹோட்டல்கள் வெளிநாட்டினரால் நிரம்பி வழிகின்றன. வெளிநாட்டினரின் வருகை குறைந்தால், நாடு மீண்டும் திவாலாகி எண்ணெய், எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வரிசை நிற்கும் சமுதாயமாக மாறும்.
அதனால் தான் இந்த தவறான செயலை செய்யாதீர்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகின்றோம். ரணில் விக்ரமசிங்க மிகவும் சிரமப்பட்டு இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |