இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
நாடு பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கைக்கு அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு ஒன்று சர்வதேச சமூகத்திடம் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, மனிதாபிமான முகவர்களிடமிருந்து மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குபவர்கள் மற்றும் நாட்டின் உதவிக்கு வர வேண்டிய பிற நாடுகளின் உடனடி கவனம் தேவை என்று குறித்த குழுவினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத அரசியல் கொந்தளிப்புடன் நாடு திணறிக்கொண்டிருக்கும் வேளையில், உயர்ந்த பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, முடங்கும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை குறித்து ஒன்பது நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீடித்த நெருக்கடி
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஆறு முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர்.
தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய அரசாங்க கட்டடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இது இடம்பெற்றுள்ளது.
உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மார்ச் மாதம் வெடித்த வெகுஜனப் போராட்டங்களால் இலங்கை அதிர்ந்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் குறைவு, வரிக் குறைப்புக்கள் மற்றும் சேவைக் கடன் செலுத்துதல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்களால் நிலைமை சிக்கலானது. இந்த நெருக்கடி மனித உரிமைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான நீண்டகால சீர்குலைவு, நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடன் நெருக்கடி, மனித உரிமைகளை செயல்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மற்றும் சுதந்திர நிபுணர் அத்தியா வோரிஸ் கூறியுள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான, IMF உடனான பேச்சுவார்த்தைகள் உட்பட எந்த ஒரு செயல்பாடும், அதன் மையத்தில் மனித உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் வோரிஸ் கூறியுள்ளார்.
இதேவேளை 2019 இல் ஐக்கிய நாடுகளின் ஒரு நிபுணர், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் அதிகரித்து வரும் நிறுவனக் கடன் பற்றிய பிரச்சினை கோடிட்டு காட்டப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்துவதே நாட்டின் மிகப் பெரிய செலவினம் என்று அறிக்கை, கண்டறிந்ததையும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வரலாறு காணாத அரசியல் கொந்தளிப்பில் சிக்கித்தவிக்கும் இலங்கையின் உயர் பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு, முடங்கும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார சரிவு குறித்து ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர்கள் இன்று எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நெருக்கடி ஒட்டுமொத்த மக்களும் மனித உரிமைகளை அனுபவிப்பதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடன் நெருக்கடியானது, நிதி அமைப்பின் கட்டமைப்பில், இடைவெளிகளை ஏற்படுத்தி, மனித உரிமைகளை செயல்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுதந்திர நிபுணர் அத்தியா வோரிஸ் கூறியுள்ளார்.
போராட்டக்காரர்களால் அரச கட்டடங்கள் முற்றுகை
தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய அரசு கட்டடங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 15 அன்று பதவி விலகினார்.
இதனையடுத்து புதிய தலைமை இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான எந்தவொரு பிரதிபலிப்பும் அதன் மையத்தில் மனித உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று வோரிஸ் கூறியுள்ளார்.