உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சமத்துவம் இல்லை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
நிறைவேற்றப்பட்ட கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குள் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம்(03.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்தமட்டில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான திறைசேரி பத்திரம் மத்திய வங்கிக்கு உரித்தாக இருக்கும் போதும், முதல்நிலை கொள்வனவாளரிடம் இருக்கும் போதும், அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கும் போதும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் மத்தியவங்கியின் முழு கட்டமைப்பும் நகைப்புக்குறியதாக மாறும்.
ஊழியர் சேமலாப நிதியம்
இந்த திட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிப்பதற்கு ஏற்றவகையில் நடைமுறைப்படுத்த முடியுமா என எனக்கு தெரியவில்லை.
ஆனால் சிலர் இதற்கு எதிராக சில வேளைகளில் வழக்கு தாக்கல் செய்யக்கூடும். அப்படி செய்தல் இந்த திட்டத்திற்கு தடைகள் ஏற்படலாம்.
இந்நிலையில், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறிக்கொண்டே 9 சதவீத அனுகூலத்தை வழங்குவதாக கூறிக்கொள்கின்றனர்.
திறைசேரி முறிகளுக்கு 35 சதவீத வட்டி வழங்கப்படும் போது, ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 9 சதவீதம் கிடைக்கும் என கூறுகின்றனர்.
இருப்பினும் வங்கிகளுக்கு நிவாரணங்களை வழங்கும்போது மக்கள் தொடர்பிலும் அக்கறை கொள்ளவேண்டும்.
இந்த திட்டம் மூலம் நாட்டின் நிதியமைச்சர் எதிர்காலத்தில் எதனையும் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் எவ்வித கலந்துரையாடலும் இன்றி நடவடிக்கைகளை எடுக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |