தமிழ் மக்களின் இருப்பு அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை: யோதிலிங்கம்
இனப்பிரச்சினை என்றால் என்ன என்பது தொடர்பில் எமது அரசியல் தலைவர்களுக்கு போதியளவு விளக்கம் இருக்கின்றது என்று கூறமுடியாது எனவும் இனப்பிரச்சினை என்றால் ''தமிழ் மக்கள் ஒரு தேசியமாக தேசமாக இருக்கின்றனர் எனவே இவ் இருப்பானது அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை” என அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் (16.12.2022) ''இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்'' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய இனம்
ஒரு தேசிய இனத்தினை தாங்கும் தூண்களாக இருப்பவை நான்கு விடயங்கள், அவை தேசிய ''இனம் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம்'' இந் நான்கு தூண்களும் அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை.
ஏன் அவர்கள் அதனை அழிக்கின்றார்கள் என்றால், அவர்கள் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது என கருதுகின்றார்கள்.
ஆகவே ஏனைய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவிட்டு போகலாம். ஆனால் ஒரு தேசிய இனமாக இருக்க முடியாது என்பது அவர்களது கருத்து.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமென்றால், அந்த தேசிய இனத்தின் வாழும் நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் அங்கு வாழும் மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்யும்போது அந்த தேசிய இனம் அழிவடையும், இந்த அழிப்புத்தான் இனப்பிரச்சினை.
இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு இருக்கவேண்டுமெனில் ஒரு தேசிய இனத்தை குறித்த அழிவுகளிலிருந்து பாதுகாப்பதே தீர்வாக காணப்படும்.
அவ்வாறு நாம் ஒரு தீர்மானத்திற்கு வருவோமாக இருந்தால் ஒரு தேசிய இனத்தின் அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் நான்கு விடயங்களை கொண்டிருக்க வேண்டும். ''முதலாவதாக குறித்த இனத்தை தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவது அந்த தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரிக்க வேண்டும். மூன்றாவது குறித்த இனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். நான்காவது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஆட்சிப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்''.
சுயநிர்ணய உரிமையுடனான சமஸ்டி
இலங்கையின் அரச அதிகார கட்டமைப்புக்குள் ஆட்சிப் பொறிமுறையை உருவாக்குவதென்றால் அது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி ஆட்சியாக தான் இருக்க முடியும்.
சமஸ்டி என்பது அரசின் இறைமை அதிகாரத்தை மத்திய அரசும் மாநில அரசும் பங்கிட்டுக்கொள்ளும் ஆட்சி முறையே சமஸ்டி ஆட்சி ஆகும். ஆகவே அவ்வாறான சமஸ்டி ஆட்சிப் பொறிமுறையை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக சொல்லப்போவதென்றால் வடக்கு கிழக்கு இணைந்த அதிகார அலகு விடயத்தில் தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும் கூட்டு அதிகாரத்தையும் கொண்டிருப்பது அவசியம்.
வடக்கு கிழக்கு இணைப்பு
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இனங்கள் இருக்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களின் தாயகமும் தான். எனவே இதில் அவர்களது வகிபாகம் தொடர்பில் அவர்களோடு பேசித் தீர்க்கலாம்.
அதேவேளை முஸ்லிம்களது தனியலகுக் கோரிக்கையை தமிழ் மக்கள் சாதகமாக பரிசீலிக்கலாம். அதற்கும் முஸ்லிம் மக்கள் சம்மதிக்காவிடினும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு தேவையாக இருக்கின்றது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது அவசியமாகின்றது.
அதிகாரங்கள்
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்கள் தேவை. குறிப்பாக தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற அடிப்படையில் அதற்கு பிறப்பாலேயே உரித்துடையவர்கள்.
அதேவேளை நீண்ட இன அழிப்பு காரணமாக தமிழ் மக்கள் 50வருடங்கள் பின்தள்ளியிருக்கின்றார்கள். எனவே சுயநிர்ணய உரிமை முக்கியம். அதேவேளை மத்திய அரசு ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறை அவசியமாகின்றது.சுயாட்சி அதிகாரங்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13வது அரசியலமைப்பு திருத்தம்
13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பரிசீலனை செய்யும் போது இலங்கை இந்திய ஒப்பந்தம் 13வது திருத்தம் மாகாண சபைகள் சட்டம் என்பவற்றை வைத்து பரிசீலிக்க வேண்டும்.
13வது திருத்தத்தில் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட இரு தரப்பும் எந்தவகையிலும் இணைந்து கொள்ளவில்லை என்பது இதன் குறைபாடு. வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டுள்ளதனால் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் கூட்டு இருப்பு கூட்டு உரிமை துண்டாக்பட்டது. தமிழ் முஸ்லீம் மக்கள் சிங்கள அரசின் தயவில் வாழும் நிலை உருவானது. இன்றைய நிலையில் கிழக்கு மாகாண சபையினை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் கிழக்கின் ஒரு தரப்பு சிங்கள கட்சிகளோடு இணைந்தாவது கிழக்கு மாகாண சபையை கைப்பற்றலாமா என்று முயற்சி செய்து வருகின்றது.
இது தமிழரசியலின் அடித்தளத்தை இல்லாமல் செய்யும் ஒரு செயற்பாட்டை நோக்கி நகரும் என கருதுகின்றேன்” என இதன்போது அவர் தெரிவித்திருந்தார்