சந்திரசேகரனை நினைவு கூரும் கடமை நாட்டின் அனைவருக்கும் உண்டு: வே.இராதாகிருஷ்ணன (Photos)
அமரர் பெ.சந்திரசேகரனின் நினைவு தினத்தை இந்த நாட்டில் இருக்கின்ற அனைவருமே நினைவு கூர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் முன்னால் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 13ஆவது சிரார்த்த தினம் நேற்று (01.01.2023) ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தனி ஒருவராக அரசாங்கம்
அவர் 1994ம் ஆண்டு தனி ஒருவராக அரசாங்கத்தை உருவாக்கினார். வட கிழக்கு மக்களுடன் நல்லுறவை பேணினார். மலையக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர அபிவிருத்தியை தோட்டங்களுக்கு கொண்டு வந்தார். எனவே அவரை நினைவு கூர வேண்டியது அனைவருடைய பொறுப்பாகும்.
மலையக மக்கள் முன்னணியின் உண்மையான விசுவாசிகளே இங்கு இருக்கின்றார்கள். அவருடைய இறுதி சடங்கின் போது அவருடைய கொள்கையை கட்டிக் காப்போம் என சத்தியம் செய்தவர்கள் கொள்கையை காட்டிக் கொடுத்து மலையக மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்படுகின்றார்கள்.
இது தான் அமரர். பெ.சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக் கடனா? என மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையக மக்களுக்கான சேவை
இதன்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியை முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் செலுத்தினார்.
இதனையடுத்து முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட பொது மக்களும்
நினைவுச்சுடர்களை ஏற்றியமையும் குறிப்பிடதக்கது.
அரசின் தன்னியச்சையான முடிவுகள்
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஷ்ணன், அமரர்.சந்திரசேகரன் இந்த நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் செய்த சேவையை யாராலும் மறக்க முடியாது.
இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மக்களுக்கு எதிரான அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடியிருப்பார்.
இன்று அரசாங்கம் மக்களின் நன்மையை கருத்தில் கொள்ளாது தன்னியச்சையான முடிவுகளை மேற்கொண்டு மக்களுக்கு சுமையாக மாறியிருக்கின்றது.
தொடர்ந்தும் மின்சார கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது. அப்படி அதிகரிக்கப்பட்டால் மலையக மக்கள் இருளில் மூழ்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
பாரிய பாதிப்பு
மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. மலையக மக்களின் வருமானம் குறைவடைந்துள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது.
எனவே எதிர்காலம் மிகவும் மோசமானதாக அமையும். சுகாதார அமைச்சர் தன்னிச்சயைான முடிவுகளை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக மருந்து பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இன்று அனேகமான வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருந்தகங்களிலும் மருந்துகள் இல்லை.
இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது
யாருக்கும் புரியவில்லை.
இன்று முதல் புதிய வரி அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையில்
இருக்கின்ற அரச, தனியார்துறை ஊழியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளார்கள்
எனவும் இதன்போது தெரிவித்தார்.



