காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு: மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் (Photos)
திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் படித்த மகளீர் திட்டம் ஊடாக 1975ம் ஆண்டு காணித்துண்டுகள் வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்கள் மக்களிடம் உள்ளதுடன் வரைபடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக வெளியேற்றம்
குறித்த காணியில் விவசாயம் செய்து பொருளாதாரத்தில் முன்னேறிய மக்கள், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக குறித்த காணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், குறித்த காணியில் இராணுவம் நிலைகொண்டது. தொடர்ந்து குறித்த காணியின் ஒரு பகுதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகமாக இயங்கி வந்த குறித்த இராணுவ முகாம், முல்லைத்தீவு இராணுவ தலைமையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த காணியின் உரிமையாளர்கள் கடந்த வாரம் நில அளவை மேற்கொண்டனர். குறித்த பணிக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காணிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம்
இந்த நிலையில், குறித்த காணிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என புதிதாக அறிவுறுத்தல் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளது. இன்றைய தினம் தமது காணியை பார்வையிட சென்ற மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
குறித்த காணி 1975ம் ஆண்டு படித்த மகளிருக்கான திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் மக்களிடம் உள்ளதுடன், வரைபடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காணியை விடுவிப்பதற்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தது.
இராணுவம் முயற்சி
இந்த நிலையில், குறித்த பகுதியில் இராணுவத்தினரால் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. மக்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், மீண்டும் காணியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவம் முயற்சித்துள்ளமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் உறவினர் வீடுகளில் தங்கி வாழ்வதாகவும் குறிப்பிடும் மக்கள், தமது காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோருகின்றனர்.
இராணுவம் தெங்கு செய்கை
குறித்த காணியை பெற்றுக்கொள்வதற்காக தமது வேலையையும் கைவிட்டதாக கூறும் மக்கள், தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமது நிம்மதியான இருப்புக்காகவும் காணியை தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.
மேலும் ஒரு பகுதி காணி இராணுவ முகாமிற்குள் உள்ளதாகவும், அக்காணியில் தற்பொழுது இராணுவம் தெங்கு செய்கையை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது காணியை விடுவித்து தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



