திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபர் மரணம்: இருவர் படுகாயம்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலிக்கண்டிகுளம் பகுதியில் நேற்று (31.12.2022) அதிகாலை வீட்டில் முற்றத்தில் நின்ற யானையைத் துரத்துவதற்கு முற்பட்டபோது யானை தாக்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.புஞ்சி பண்டா (74வயது ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வயல் காவலுக்காக சென்ற (30.12.2022) டபிள்யூ. எம். எஸ். பண்டா (59வயது) யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலவெவ பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த என். சுமதிபால (65வயது) என்பவர் யானையின் தாக்குதலினால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்பொழுது யானை மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் யானைகளின் அட்டகாசம்
அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த கூடிய கவனம் எடுக்க வேண்டும்
எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



