நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்கள் பொலிஸாரால் மீட்பு (Photos)
நாட்டில் போதைப்பொருள் பாவனை கனிசமான வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பொலிஸாரும் பல்வேறு சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதோடு அதோடு தொடர்புடையவர்களையும் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
தலைமன்னார்
தலைமன்னாரில் இருந்து வெள்ளிக்கிழமை (30.12.2022) கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன் போது பேருந்தின் பின் ஆசனத்தின் இருக்கையின் கீழ் சுமார் 95 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தை நிறுத்தி சோதனை
பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கே.ஹேரத் உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் தலைமையிலான பொலிஸ்சார் குறித்த பேருந்தை இடை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர், சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
செய்தி : ஆஷிக்
திருகோணமலை
திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் ஐந்து கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் முன்னிலையில் குறித்த
சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த முகம்மத் ரபீக் நிஸாம் (34 வயது) என தெரிய வருகின்றது.
செய்தி: பதுர்தீன் சியானா
வவுனியா
வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று (01) தெரிவித்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளையடுத்து குறித்த இளைஞருக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செய்தி : திலீபன்
கிளிநொச்சி
கிளிநொச்சி - முட்கொம்பன் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்துமாறு கோரியும், குறித்த பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் அமைக்க கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி - முட்கொம்பன் பிரதேசத்தில் நேற்று (31-12-2022) இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ''சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு'' போன்ற விடயங்களில் உரிய தரப்புகள் கவனம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: யது



