முல்லைத்தீவில் தமிழ் கிராமம் ஒன்றினை முஸ்லீம் வட்டாரத்துடன் இணைத்தமைக்கு எதிர்ப்பு! (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லை நிர்ணயகுழுவினால் வட்டாரங்கள் குறைப்பு செய்யப்பட்ட போதும், முழுமையான சிங்கள மக்களை கொண்ட வெலிஓயா பிரதேசத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் வாழும் கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்துள்ளார்.
10 வட்டாரங்களாக குறைப்பு
13 வட்டாரங்களை கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லை நிர்ணய குழுவினால் 10 வட்டாரங்களாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கணுக்கேணி வட்டாரத்தில் குமாரபுரம் கிராமம் உள்வாங்கப்பட்டிருந்தது. குமாரபுரம் கிராமத்தில் 80 முஸ்லீம் தமிழ் குடும்பங்களும் 333 தமிழ் குடும்பங்களும் வாழ்கின்றார்கள்.
இந்த குமாரபுரம் கிராமத்தினை தற்போது ஹிச்சிரா புரம் வட்டாரம் என புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லீம் தமிழ்மக்கள் செறிந்து வாழும் மக்களுடன் இணைத்துள்ளார்கள்.
குமாரபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயம் காணப்படுகின்றது. இந்த நிலையில் குமாரபுரம் கிராமத்தினை முஸ்லீம் மக்கள் வாழும் வட்டாரத்துடன் இணைப்பதை குமாரபுரம் கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கூகிள் வரைவடத்தில் எமது கிராமத்தினை பார்வையிடும் போது குமாரபுரம் முஸ்லீம் கொலனி என்று காணப்படுகின்றது.
வரைபடங்கள் ஊடாக தீர்மானம்
தரைதோற்ற அமைப்பினை வரைபடங்கள் ஊடாக பார்த்தே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளார்கள். எல்லை நிர்ணய அமைப்பு எல்லைகளை நிர்ணயம் செய்யும் போது கிராம மட்ட அமைப்புக்களை அழைத்து பேசி இருக்க வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த அதிகளவானவர்களே அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்க மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் நிலை தெரியாது. மாவட்டத்தினை சார்ந்தவர்களுக்குத்தான் மக்களின் பிரச்சினைகள் தெரியும் என்றும் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது முதற்கட்ட நடவடிக்கை தவறும் பட்சத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்மக்கள் அதிகம்வாழும் குமாரபுரம் கிராமத்தினை கணுக்கேணி
வட்டாரத்துடன் இணைக்குமாறு மக்கள் கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்
க.விமலநாதனிடமும்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலனிடமும்
மனுகையளித்துள்ளார்கள்.



