இந்திய நிவாரண அரிசி மூடைகள் வவுனியாவில் பதுக்கிய நிலையில் மீட்பு! (video)
இந்திய அரசாங்கத்தால் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு.
இந்திய அரசாங்கத்தால் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி பைகள் பாவனைக்கு உதவாத நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து நேற்று (28.12.2022) மீட்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு உதவாத நிலை
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் அரிசி மூடைகள் சில இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தமைக்கு அமைவாக குறித்த மண்டபத்தை அப்பகுதி மக்கள் சோதனை செய்த போது இந்திய அரசாங்கத்தால் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் ஒரு தொகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் இலச்சனை பொறிக்கப்பட்டிருந்த குறித்த அரிசி மூடைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காத நிலையில் பல மாதங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையால் அவை புழு, வண்டு மற்றும் எறும்புகள் நிறைந்து பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
பசி போக்கும் திட்டம்
இலங்கைக்கு உதவும் நேக்கோடு தமிழக அரசினால் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இவை அதிகளவில் வடக்கு மக்களின் பசி போக்கும் திட்டத்தில் கிராம சேகவர் பிரிவு ரீதியில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதி அண்மையில் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்திருந்த நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்த பகுதி மக்கள் கிராம சேவகரும் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் இணைந்தே இதனை பதுக்கி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
பதுக்கி வைக்கப்பட்ட அரிசி
மக்கள் பதுக்கி வைக்கப்பட்ட அரிசியை கண்டு பிடித்த நிலையில் அதனை உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதற்காக குடும்ப அட்டைகளுடன் வருமாறு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அங்கு வந்த மக்கள் குறித்த அரிசி வண்டுகள் நிறைந்து காணப்பட்டதால் கடும் கோபமடைந்திருந்ததுடன் கிராம சேவகரே அரிசியை வழங்காமல் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலக கிராம சேவகர்களின் தலைமை அதிகாரியிடம் கேட்ட போது, குறித்த அரிசி மழையின் போது கொண்டு வந்து இறக்கப்பட்டதால் அதனை மக்களுக்கு வழங்க முடியாது காணப்பட்டதால் அதனை மீளளிப்பு செய்து வேறு அரிசி அம்மக்களுக்கு வழங்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
இந்த அரிசி கோழிக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தாகவும், சிலருக்கு வழங்கப்பட்டதாகவும் ஏனையவர்களுக்கு வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவித்ததுடன் இதற்கான அனுமதி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு பெறப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசனிடம் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவ்அறிக்கை கிடைத்ததுடன் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.



