சம்பந்தனை சாட்சியாக கொண்டு இனப் படுகொலையாளிகளை நீதிமன்றில் நிறுத்துங்கள்! ஜெனிட்டா (video)
தமிழ் தேசியத்தை குழி தோண்டி புதைக்கும் அமைப்பாக கூட்டமைப்பை மாற்றியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரை கொன்றுவிட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் என சம்பந்தர் கூறியுள்ளார். அவரே ஒரு சாட்சியாக உள்ளார் எனவே அவரை ஒரு சாட்சியாக கொண்டு இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க செயலாளர் சி.ஜெனிட்டா தெரிவித்தார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (20.12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடு
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் இவருக்கும் பல ஆணைக்குழுக்களுக்கும் இழப்பீடு தேவையில்லை கூறி போராடியிருக்கின்றோம். இவர்கள் முதலில் வாழ்வாதாரம் கொடுப்பதாகவும், அதனூடாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என லஞ்சம் கொடுத்து பேரம் பேசினார்கள்.
தற்போது இழப்பீடு கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இனிவரும் காலத்தில் எமது உறவுகள் விழிப்பாக இருக்கவேண்டும்.இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கு நாம் முட்டுக்கட்டையாக இருப்பதாக நினைக்கிறார்கள்.
யுத்தம் முடிந்து 13 வருடமாக நாம் போராடிக்கொண்டிருக்கும் போது இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேசத்தின் நீதியை கோரி போராடி வருகின்றோம். எனவே இனப்படுகொலை செய்தவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதி பெறவேண்டும் என்றே நாம் பாடுபடுகின்றோம்.
சம்பந்தன் மக்களுக்கு என்ன செய்தார்?
இந்நிலையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள சம்பந்தர் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என அவரிடம் ஒரு கேள்வி கேட்கின்றோம். தமிழ் தேசியத்தை நேசிக்கும் அமைப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று தமிழ் தேசியத்தை குழி தோண்டி புதைக்கும் ஒரு அமைப்பாக மாற்றி வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன செய்யப்பட்டார்கள் என நாம் அவரிடம் கேட்டோமா? இவர் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களின் வாக்குகளை பெற்றுத்தானா நாடாளுமன்றம் சென்றார் என்பதையும் கேட்க விரும்புகின்றேன்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
கள்ள வாக்கு அல்லது காசு கொடுத்து வாக்குப் பெற்று தான் அவர் நாடாளுமன்றம் போயிருக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்காது சர்வ கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார். இவர்கள் தாங்கள் நினைத்தைத் கதைத்துக் கொண்டு தாங்கள் நினைத்ததை தருவதற்காக நாங்கள் போராடவில்லை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கொன்றுவிட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் என சம்மந்தன் கூறியுள்ளார். அவர் அவ்வாறு சொல்வதால் அவருக்கு கொன்றது தெரியும் அல்லது அவர் கொல்வதற்கு தூண்டியுள்ளார் போல் உள்ளது. கொல்லப்பட்டதற்கு அவரே ஒரு சாட்சியாக உள்ளார். எனவே சம்மந்தன் அவர்களை ஒரு சாட்சியாக கொண்டு இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
கால அவகாசம்
ரணில் விக்கிரமசிங்க மனிதவுரிமைகள் சபையில் காலஅவகாசத்தைப் பெற்றிருந்தார். அவரது கால அவகாசங்கள் முடிந்து விட்டன. இந்த வருடமும் முடிவடைகிறது. அவர் அதில் இருந்து தப்பிக் கொள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை முடிப்பதாக காட்ட முயல்கிறார். அதற்கு சம்மந்தன் அவர்களும் வழிகோலியுள்ளார்.
எதிரிகளை மனித்துக் கொள்ளலாம். தமிழ் தேசத்து துரோகிகளை மன்னிக்க மாட்டோம். தமிழ் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரோகத் தனங்களை தொடர்ந்தும் இழைத்து வருகிறது. இவர்களை இனிவரும் காலங்களில் மக்கள் களைந்து உண்மையான தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களை அனுப்பி நிரந்தர அரசியல் தீர்வைப் பெற முயல வேண்டும்.
சம்பந்தன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்று சென்றவர் என்றால் அவர்களது அபிலாசைகளையும், அவர்களுக்கான தீர்வையும் தான் பேச வேண்டும். அரசியல் கதிரைகளையும், சுகபோகத்தையும் அனுபவிப்பதற்காக தமிழ் மக்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் பகடைக்காயக வைத்துக் கொண்டு காலத்தை ஒட்டக் கூடாது.
இப்படியானவர்களை இனிவரும் காலங்களில் நிராகரித்து தமிழ்
மக்களுக்கான உண்மையான தேசியத்தை நேசிப்பவர்களை அனுப்ப வேண்டும் என்று இதன் போது தெரிவித்திருந்தார்.




