பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது(Photos)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இன்றைய தினம் (11.12.2022) கோப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்
கிளிநொச்சி பரந்தன் சந்தியில் அதிகாலை நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியமை, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த யாழ்.மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியரின் தங்கச் சங்கிலியை அறுத்தமை, அதேதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவரின் தங்க சங்கிலியினை அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து திருடியமை போன்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே இன்றைய தினம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல தடவைகள் தப்பி ஓட முயற்சி
கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து காணப்படுவதாகவும் பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும் தப்பி ஓட முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 26 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரின் பிடியிலிருந்து தப்பிச்சென்ற நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளவாலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் (12.12.2022) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
