17 வருட பதக்க கனவு: நொடிப்பொழுதில் இழந்த இலங்கை அணி
சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்ற போதிலும், கோல் பரிமாற்றத்தின் போது மேற்கொண்ட விதிமீறல் காரணமாக பதக்கத்தை இழந்துள்ளது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இலங்கை அணி பறிகொடுத்துள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவின் 10ஆவது நாளான நேற்று (02.10.2023) இரவு நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கைக்கு பதக்கம் ஒன்று கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் அருண தர்ஷன, காலிங்க குமாரகே, நதீஷா ராமநாயக்க மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.
மெய்வல்லுனர் விதி மீறல்
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் பஹ்ரைன் அணி 3 நிமிடங்கள் 14.02 செக்கன்களில் போட்டியைக் கடந்து தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, இலங்கை அணி (3 நிமிடங்கள் 14.25 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், இந்திய அணி (3 நிமிடங்கள் 14.34 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இருப்பினும், போட்டியின் முடிவில் சுவட்டுப் பாதை விதிமுறையை மீறியதால் (மெய்வல்லுனர் விதி 17.3.1 மீறல்) இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இலங்கையின் வெள்ளிப் பதக்கமும் கைநழுவிப் போனது. இதனையடுத்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கஸகஸ்தானுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியை ஆரம்பித்த அருண தர்ஷன தனது சுவட்டுப் பாதைக்கு வந்து நதீஷா ராமநாயக்கவிடம் கோலை கையளித்துள்ளார்.
எனினும், அருணவின் ஒரு கால் கோல் பரிமாற்றத்தின் போது எல்லைக் கோட்டை தாண்டியதால், மெய்வல்லுனர் விதிமுறைகளின் படி இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, இந்த நான்கு வீரர்களும் இணைந்து கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் புதிய இலங்கை சாதனையுடன் (3:15.41 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தமை குறிப்பிடத்தக்கது.