இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! சுனாமி அனர்த்தம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நிலவும் நிலநடுக்கங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் அதிக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் நில அதிர்வு மானிகளை பொருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் நேற்று (24) அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்டது.
இதன் தாக்கம் பதுளை, கண்டி மற்றும் மாவனெல்ல பகுதிகளிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி முதல், நாட்டில் அவ்வப்போது பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிடிய, திருகோணமலை மற்றும் கிரிந்த உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பேரிடர் அபாயம்
இதேவேளை, நிலநடுக்கம் தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் (புவியியல்) கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,
"சேதங்கள் ஏற்பட்டதாக எமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிலநடுக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி மற்றும் மாவனல்லையும் உணரப்பட்டுள்ளது. புவியியல் தரவுகளின்படி, மேஜர் நிலநடுக்கத்தை எதிர்பார்க்க முடியாது, ஆனால், இந்த நாட்களில், சிறு அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.அதற்கேற்ப கணக்கீடுகள் செய்து, அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து வருகிறோம்.
இன்று, புவியியல் வல்லுனர்கள் குழு, அம்பாந்தோட்டை பகுதிக்கு செல்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பேரிடர் ஏற்படும்.ஆனால் சுனாமி ஏற்படும் சூழல் இல்லை.அதற்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.