இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படவுள்ள வீழ்ச்சி - மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
இலங்கை ரூபாவின் பெறுமதி 567 ரூபாவாக குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான இலங்கை ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில் 1000 ரூபாவின் பெறுமதி 2028 ஆம் ஆண்டளவில் 567 ரூபாவாக குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒருவரின் வருமானத்தை 43 சதவீதம் அதிகரிக்காமல் இந்த நிலையை எதிர்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இவ்வாறு வருமானத்தை பெருக்குவது ஒருபோதும் சாத்தியமில்லை எனவும், இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் 119% வரிச்சுமையை மக்கள் மீது திணிக்க அரசு திட்டமிட்டுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும். 2023ஆம் ஆண்டு 27,871 பில்லியன் ரூபாவாக இருந்த வரிச்சுமை 2028ஆம் ஆண்டில் 44,601 பில்லியன் ரூபாவாக உயரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையைச் சமாளிக்க, ஒருவரது உணவு நுகர்வு அளவை பாதியாகக் குறைக்க வேண்டும். இது நடந்தால், பெரும்பாலான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு மரணமடைவார்கள் என அவர் எச்சரித்தார்.
இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்பதற்கு அரசாங்கம் அதிக முயற்சியையும் கூடுதல் செலவையும் செய்ய வேண்டியிருக்கும்.
தற்போது பொருளாதாரம் 3 - 4 சதவீதம் வரை சுருங்கி வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது கடினம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.