சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சட்டவிரோதமாக கடல் வழியாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது, அவுஸ்திரேலிய எல்லை படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 46 பேர், அவுஸ்திரேலிய கப்பல் ஒன்றின் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய எல்லை படைக் கப்பலில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று, மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, இந்திய பெருங்கடல் பகுதியை பயன்படுத்தும் மற்ற பங்குதாரர்களுடன் கூட்டு சேர்ந்து, கடல் வழியாக வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை தடுக்க வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை நடத்துகிறது.
சட்டவிரோத செயல்
இந்த தொடர்ச்சியான கண்காணிப்பின் விளைவாக இலங்கையில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடல், மீன்பிடி இழுவை படகு மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடல் பயணத்தை ஆரம்பித்த நிலையில் ஜூலை 21 திகதி அவுஸ்திரேலியாவின் கடல் எல்லையில், கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது, அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் குறித்த இயந்திரப்படகை கைப்பற்றிய போது அதில் இருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 17 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளின் செயல்
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய எல்லை படையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், “அவுஸ்திரேலிய அதிகாரிகளால் 183 இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதில் சமீபத்திய சட்டவிரோத குடியேற்றக் குழுவும் அடங்கும்.
இதேவேளை கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த அனைவரும் படகுகளும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
மேலதிக செய்தி-பவன்