கொழும்பு துறைமுகத்துக்கு பெருந்தொகை போதைப்பொருட்களுடன் அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்
இந்திய (India) கடற்படையினரின் உதவியுடன் கடலில் கைப்பற்றப்பட்ட 3380 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்கள், கொழும்பு (Colombo) துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
இலங்கையின் கொடியுடன் கூடிய பலநாள் கடற்றொழில் இழுவைப்படகுகள் இரண்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் கடந்த நவம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒரு வெற்றிகரமான உளவுத்துறை ஒத்துழைப்பைத் தொடர்ந்து இது சாத்தியமானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இழுவை படகுகள்
இந்தநிலையில், அந்த கடற்றொழில் இழுவை படகுகளுடன் சந்தேக நபர்கள் 11 பேரும், கடந்த 29ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம்.ஆனந்தும் உடனிருந்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் ஏற்றப்பட்ட இழுவை படகில் இருந்த சந்தேக நபர்கள் 24 முதல் 49 வயதுக்குட்பட்ட தெவுந்தர, கந்தர மற்றும் மொனராகலை பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |