பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவின் லிவர்பூலில் கடை ஒன்றில் இலங்கை பெண்ணான தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு 29 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லிவர்பூல் கிரவுன் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 44 வயது மனைவி நிலானி நிமலராஜாவை கத்தியால் 18 முறை குத்திக் கொன்ற நிமலராஜா மதியாபரணம் என்ற 47 வயதுடைய இலங்கையருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொடூர கொலை
கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி நடந்த கொடூர கொலைக்கு, கொலையாளியான இலங்கையருக்கு குறைந்தது 29 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தனது இரண்டாவது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கோபத்தில் பிரிந்திருந்த மனைவியை கொடூரமாக கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே குடும்ப வன்முறை காரணமாக நிலானியையும் மூத்த மகளையும் தொடர்பு கொள்ளக் கூடாது என நீதிமன்றம் அவருக்குத் தடை விதித்திருந்தது.
கொலை செய்வதற்கு முன்பு அஸ்டா சூப்பர் மார்க்கெட்டில் முகமூடி அணிந்து கத்திகளை வாங்கிய அவர், பின்னர் மனைவி வேலை செய்த கடைக்குச் சென்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தச் செயலால் மூன்று பிள்ளைகள் அனாதையாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.