சுவிஸ் அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த இலங்கை பெண்! நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது
சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களை விடுவித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
29 வயதான இலங்கை பெண் ஒருவர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் வாகோஃப் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது, குறித்த சம்பவம் சிறைச்சாலையிலுள்ள கண்காணிப்பு கெமராவில் தெரியரவர, இரவுப்பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் உட்பட நால்வர் அவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சையை உடனடியாக ஏற்பாடு செய்ய தவறியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று சுமார் 18 நிமிடங்களுக்கு பின்னரே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி இரண்டாவது நாள் உயிரிழந்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு சிறை காவலர்களின் கவனக்குறைவின் காரணமாகவே பெண் உயிரிழந்ததாக கூறி குற்றவியல் நடவடிக்கையென வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு பேஸல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நால்வரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்துள்ள நீதிமன்றம், இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்க கூடாது எனவும், இது அரசு, நீதித்துறை மற்றும் சிறை அமைப்பின் தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.