சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கைப் பெண்! தாயார் வெளியிட்டுள்ள தகவல்
சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண், தனக்கு நடந்த துன்பங்கள் அனைத்தையும் தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குறி்ப்பிட்டுள்ளார்.
தனக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், அந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும், தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று (20) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மகளின் மரணத்தில் சந்தேகம்
இந்த நிலையில் இறந்த பெண்ணின் தாயார் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இதுபோன்ற வன்முறை கும்பலை தான் பார்த்ததில்லை என தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மகள் பணிபுரிந்த வீட்டின் பாதுகாப்பு கமராக்களை அவதானித்து தனது பெண்ணுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.