லண்டனில் பாடசாலை சென்ற இலங்கை வம்சாளி சிறுமிக்கு நேர்ந்த கதி - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடக்கு லண்டனில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த பொழுது கார் ஒன்று மோதியதில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
இவ்வாறு உயிரிழந்த சிறுமி, மெலிசா பிரேமரத்னே என பிரிட்டிஷ் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹைகேட் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு மாணவி என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காலையில் பாடசாலைக்கு செல்லும் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவையில் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரை செலுத்திய 68 வயது நபரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
பொலிஸார் விசாரணையின் பின்னர், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம், அடிசன் லீ என்ற தனியார் வாடகை நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அந்த நிறுவனம் பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

மெலிசாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது குடும்பத்தினர் அவரை “எங்கள் வாழ்வில் ஓர் ஒளி” என்று வர்ணித்து, அவரது கருணை, பாசம் மற்றும் மனவுறுதியை நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த சாட்சிகள் மற்றும், சிசிடிவி அல்லது மொபைல் ஃபோன் காணொளி காட்சிகள் வைத்திருப்பவர்கள் முன்வருமாறு பொலிஸார் அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.