வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் போராட்டம்! பல்வேறு தரப்பினர் ஆதரவு (video)
எதிர்வரும் (25.04.2023) ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்வேறு தரப்பினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஆதரவு
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில் குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகியவை இணைந்து இன்று (23.04.2023) தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஊடகசந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளருமான டானியல் வசந், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சி சார்பாக கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ.ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல்
'‘குறிப்பாக வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கமானது எமது மக்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி ஏற்கனவே அடக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கின்ற எமது மக்களை மீண்டும் மீண்டும் அடக்கி ஆள்வதற்கான ஒரு புதிய சட்டத்தை உருவாக்குகின்றது.
இதற்கு எதிராக நாங்கள் அனைவரும் கிளர்ந்து எழுந்து இந்த சட்டத்தை இந்த நாட்டிலிருந்து துடைத்து எடுப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினூடாக அரசாங்கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சிறிய கருத்தை பதிவிட்டாலே அவர்களை கைது செய்து சிறை படுத்துவதற்கான அதிகாரம் இந்த ஆயுதப் படைகளுக்கு வழங்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த ஆயுதப் படைகளுக்கு இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டம் அதே போன்று அவசர கால தடைச் சட்டம் ஊடாக பல அடக்குமுறை அதிகாரங்கள் வழங்கி இருக்கிறது.
உதாரணத்திற்கு எமது கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான அதிகாரம் எமது நிலங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரம் மற்றும் கேள்வி கணக்கின்றி எமது இளைஞர்கள் யுவதிகளை சிறை படுத்துவதற்கான அதிகாரம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான அதிகாரம் என்று பல அதிகாரங்களை வழங்கி இந்த நாடு எமது மக்களை அடக்கி ஆள்கிறது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
மீண்டும் மீண்டும் எமது மக்களை ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் வைப்பதற்கான புதிய சட்டத்தை நாட்டிலே இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.
அது தான்சட்டம் எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இந்த நாட்டில் கொண்டு வராத வகையில் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த சட்டமானது தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.
முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த விடயத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்பதுடன் எதிர் வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய அனைத்து மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அன்றைய தருணம் வர்த்தக நிலையங்களை மூடி அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் முச்சக்கர வண்டிகள் அரச தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதோடு இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித நேயச் செயற்பாட்டாளர்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு பாரிய எதிர்ப்பை காட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: ஆஸிக்
சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு
தமிழர்களுடைய தொல்பொருள் சின்னங்கள், ஆலயங்கள் அழிப்புக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்பு சட்டத்திற்கு எதிராகவும் எதிர்வரும் 25 ம் திகதி அதாவது நாளை மறுதினம் இடம்பெறும் கதவடைப்பு போராட்டத்திற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பூரண ஆதரவு வழங்குவதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவனரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி. அ. சோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது 1979 களில் கொண்டுவரப்பட்டது என்றும், ஆனால் அப்போது அது தமிழ் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்றும் இதனால் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள் என்றும், தற்போது கொண்டு வர இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரானது என்றும், இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் இணைந்து போராட வேண்டும் அல்லது குரல் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை குறித்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தார்கள் என்றும் இனி எதிர்நோக்குவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம் இது ஒட்டுமொத்த மக்களுடைய பிரச்சினை என்பதற்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி: எரிமலை
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கோரிக்கை
இன்று நாட்டில் திட்டமிட்டு தமிழர் பிரதேசதிலுள்ள தொண்மையான பழமையான ஆலயங்களை ஆக்கிரமித்து பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடு தீவிரமடைந்துள்ளது எனவே இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 25ம் திகதி வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண நிர்வாக முடக்கலுக்கு வர்த்தக சங்கத்தினரும் அரசியல்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழரசு கட்சி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாவிதன்வெளியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரது காரியாலயத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் போர்சூழல் இருந்த காலத்தைவிட மிக மோசமான செயற்பாட்டை தமிழர்பகுதியில் அரச படையினரும் பௌத்த மத தலைவர்களும் அரசியல்வாதிகளுமாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனவே தமிழ் மக்களை பொறுத்தமட்டிலே நீண்டகாலமாக இந்த நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்த எமது ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலும் கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்பது மிக மோசமான தமிழர் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடு இதனை உடனடியாக நிறுத்தவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடப்பாடாக உள்ளது இப்பெழுது நாட்டிலே பொருளாதார ரீதியாக பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டபொழுது சர்வதேசத்தின் உதவியை நாடியிருந்தனர்.
அப்போது அந்த அடிப்படையில் இந்த நாட்டிலே ஒரு சமாதான எற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது பிரச்சினையை தீர்த்துவைப்பேன் என ஜனாதிபதி கோரிக்கையை முன்வைத்ததையடுத்து சர்வதேசம் நிதிகளை வழங்கியுள்ளது.
ஆனால் அது கூட நடக்கவில்லை எனவே சமாதானத்தை கட்டியொழுப்ப வேண்டுமாயின் தமிழர்களுடைய பிரச்சினையை விரைவில் தீர்க்கவேண்டும். அதற்கப்பால் கோட்டாபய ராஜபக்சவினால் நிறுவப்பட்ட தொல்பொருள் செயலணியை உடனடியாக நிறுத்தி பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற அந்த பயங்கரவாத செயற்பாட்டை நிறுத்தவேண்டும்.
இன்று மக்கள் மத்தியிலே குழப்பத்தை அல்லது ஒரு மோசமான நிலையை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே இந்து ஆலயங்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அதனை உடன் நிறுத்தவேண்டும் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து தொல் பொருட்களும் பௌத்த மதத்தை பிரதிபடுத்துவதாக அமையவில்லை ஆனால் இந்து மதம் சார்ந்த வியங்களும் இருக்கின்றது அவ்வாறு இருக்கின்றபோது உண்மையை சொல்லவேண்டும்.
அதைவிடுத்து இந்த நாடு ஒட்டுமொத்தமாக ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இந்த செயற்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுமாக சோர்ந்து எதிர்வருகின்ற 25 ம் திகதி இந்த நாட்டிலே எங்களுடைய எதிர்பை வெளிப்படுத்தி நாட்டிலே வாழுகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள், என்ற அடிப்படையில் ஒரு சமாதானத்தை கட்டியொழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பூரண ஹர்தாலுக்கு அழைப்பை விடுக்கின்றோம் என்றார்.
செய்தி :பவன்
பா.அரியநேத்திரன் கோரிக்கை
வடக்கு கிழக்கில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி தலைவி க.ரஞ்சினி ஆகியோர் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் எதிர்வரும் 25ஆம் திகதி முன்னெடுக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் போக்குவரத்துச்சேவையினை நிறுத்தியும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களிலும் இன்று காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.கொடிய பயங்கரவாத இந்த புதிய சட்டமானது மிகவும் கொடூரமானது என்பதை இலங்கையிலிருக்கின்ற எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும்,புத்திஜீவிகளும் தெரிவித்துவருகின்றனர். இந்த சட்ட மூலத்தின் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களே அதிகளவில் பாதிக்கப்படபோகின்றோம்.
அந்த பயங்காத எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதன் காரணமாகவே அன்றைய நாளை ஒரு பொது எதிர்ப்பாக காட்டவேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஏழு கட்சிகளுடன் இணைந்து பல்வேறுபட்ட பொது அமைப்புகளும் இணைந்து இந்த பொது கதவடைப்பினை 25ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் வர்த்தகர்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய வர்த்தகர்களும் இந்தபோராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அதனைவிட ஒரு கொடிய சட்டம் வருகின்றபோது அதற்கான எதிர்ப்பினை நாங்கள் காட்டாமல்விடுவோமானால் அதனை அங்கீகரிக்கின்றோமா என்ற கேள்வியெழுகின்றது'' என்றார்.
செய்தி:குமார்




