விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்படியில்லை : அழிவை எதிர்நோக்கும் தமிழர் பகுதி (Photos)
விடுதலைப் புலிகளின் காலத்தில் இல்லாதவாறு இப்போது அழிவின் விளிம்பில் கால்நடைகள் இருப்பதாக அதனை வளர்ப்போர் ஆதங்கப்படுகின்றனர்.
கால்நடைகளின் களவைத்தடுப்பதற்கு பட்டிக்காவலுக்கு போகும் நிலை தோன்றியுள்ளது. பால் மாடுகளைக்கூட பாதுகாத்து வளர்ப்பதற்கு பெரும் சிரமத்தினை கால்நடை வளர்ப்போர் எதிர்கொண்டு வருகின்ற போதும் அதனை தடுப்பதற்கான உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றியடைந்ததாக தெரியவில்லை என அவர்கள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.
முல்லைத்தீவு, களிக்காடு, கோடாலிக்கல்லு, தண்ணிமுறிப்பு, முறிப்பு,குமுழமுனை அளம்பில் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்களிடையே பட்டிக்காவல் தொடர்பில் மேற்கொண்ட தேடலின் போதே தகவல்கள் பெறப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த இடங்களில் மாடுகள் களவு போதலும் களவு போன மாடுகளை மீண்டும் பிடிப்பதுமாக காலங்கள் நகர்ந்து போகின்றன. எங்களுக்கு பட்டிக்காவல் புதுச் சுமையாகிப் போய்விட்டது என கால்நடை வளர்ப்போர் குறிப்பிடுவதையும் நோக்கலாம்.
புதுச் சுமையான பட்டிக்காவல்
முன்பெல்லாம் வயல் காவலுக்கு மட்டும் போவோம்.இப்போது வயல் காவலோடு பட்டிக்காவலுக்கும் போக வேண்டியதாயிற்று. பகலெல்லாம் மாடுகளை மேச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டும்.இரவில் பட்டிக்கு கொண்டு வந்த மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு காவலுக்கு இருக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் பலர் தங்கள் நெருக்கடி நிலையினை பகிர்ந்து கொண்டனர்.
பட்டிக் காவலை இரு விடயங்களுக்காக அவர்கள் செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிடுகின்றனர். இரவில் பட்டியில் உள்ள மாடுகளை பட்டியை பிரித்து வெளியேற்றி விட்டதும் அவை மேச்சலுக்காக வயல் நிலங்களுக்குள் சென்று விடும். அப்போது அவற்றை பிடித்துக் கட்டிவைத்து விட்டு அழிவுகாசு கேட்க முயற்சிப்பதாக கால்நடை வளர்க்கும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்த விடயங்களை கமக்கார அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்டும் போது குற்றச்சாட்டுக்களை பொருத்தப்பாடாக ஆராய்வதை விடுத்து ஆதாரம் என்ன என கேட்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
முரண்பட்டுக் கொள்வதிலும் எங்கள் மாடுகளை நாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்லது என்பதால் காவலுக்கு இருக்கின்றோம் என மேலும் குறிப்பிட்டனர். பட்டிகளில் உள்ள மாடுகளை வாகனங்களைக் கொண்டு வந்து களவாக ஏற்றிச் சென்று விடுகின்றனர் என மற்றொரு காரணத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
பகலில் கூட மேச்சலுக்காக கட்டிவளர்க்கப்படும் பால் மாடுகளைக் கூட களவாடி செல்கின்றனர். களவாடப்பட்ட பால் மாடுகள் மற்றொருவருக்கு வளர்ப்புக்காக விற்கப்படலாம். அல்லது இறைச்சிக்காக விற்கப்படுகிறது என குறிப்பிடுகின்றனர். மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டோடு இருந்த இளம் கன்று கடத்தப்பட்டு விட தாய்ப்பசு அந்த இடத்தை விட்டு வர மறுத்து இரண்டு நாட்களாக அடம்பிடித்ததாக பால் மாடு வளர்க்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
கன்றில்லாத மாட்டை பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பால் உற்பத்தியும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிர்வாகம் சரியில்லை
மாணவன் பிழை செய்தால் சொல்லலாம்.ஆசிரியரே பிழை செய்தால் யாரிடமும் போய்ச் சொல்வது? என மாடு வளர்க்கும் வயதான ஐயா கேள்வி எழுப்பி நிலைமையை உணர்ந்த முற்பட்டார். இறைச்சிக்காகவே மாடுகளை இரவில் களவாடிச் செல்கின்றனர். நடைமுறை விலையிலும் குறைந்த விலைக்கு மாடுகளை இறைச்சிக் கடை நடத்துவோர் வாங்கிக் கொள்வதாலேயே இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இறைச்சிக் கடைக்காரர் இப்படி வாங்கிக் கொள்ளாது விட்டால் கள்ள மாடுகளை களவெடுத்தவர்களே இறைச்சியடித்து எத்தனை நாட்களுக்கு விற்க முடியும்? பிடிபடாமல் தொடர்ந்து செய்ய முடியாதல்லவா? என கேள்விகளை அடிக்கினார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் ஒரு தடவை சொன்னால் போதும் பிறகு அது நடக்காது செய்து விடுவார்கள். முன்பெல்லாம் பட்டிக்காவலுக்கு தான் வருவதில்லை. இங்கே அப்படி யாரும் இருப்பதும் இல்லை. இப்போதெல்லாம் அப்படியில்லை. பட்டிக்காவல் இல்லாவிட்டால் மாடுகளை காண முடியாது. இதனாலேயே பட்டிக் காவல் அவசியமாகின்றது என மேலும் குறிப்பிட்டார்.
இப்படியே நிலைமை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மாடுகள் அழிந்து போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டதனையும் சுட்டிக் காட்டலாம். நிர்வாகம் சரியாக இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதிருக்கும். இங்கே எல்லாமே விரும்பத்தகாத படியே நடந்து முடிகின்றது என ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியதோடு விடுதலைப்புலிகளின் நிர்வாகத் திறனோடு ஒப்பிட்டு பேசி அவர்களது நிர்வாக நேர்த்தியையும் பாராட்டினார். அப்போது இருந்த சந்தோசமான வாழ்க்கை இப்போது இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விவசாயம் தமிழர்களின் பாரம்பரிய பண்பாடாகும்
பயிர்ச் செய்கையும் விலங்கு வளர்ப்பும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுவது விவசாயம் என வரையறுக்கப்பட்டுள்ளது. பயிரிடுதலும் விலங்கு வளர்ப்பும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகள் மூலம் அதிக நன்மைகளை பெற்றுக் கொண்டனர் என்பதை தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றினை மீட்டிப் பார்க்கும் போது அறிந்துகொள்ள முடிகின்றது.
எனினும் இப்போதெல்லாம் முரண்பட்டு நிற்கும் இரு துறைகளாக விவசாயத்தில் இவை இருப்பதனை அவதானிக்க முடிகின்றது என தமிழர் பாரம்பரியம் பற்றிய ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஒன்றை ஒன்று பாதுகாத்து ஒருங்கிணைந்து ஒருசேர வாழ்ந்து போதலில் உள்ள நன்மைகள் எல்லாம் இப்போது பேச்சில் மட்டுமே இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் பாதிப்படையும் எந்தவொரு செயற்பாட்டையும் செய்யாது இருக்கும் படியான ஒரு சூழல் தோன்ற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் விவசாயத்தினை நவீனமயப்படுத்தி அதிக விளைச்சல்களை அறுவடை செய்து தாம் பயன்படுத்துவதோடு தன்னிறைவு பெற்று ஏனைய தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்து பயனடைகின்றன.
ஆனாலும் நாம் வளமான நிலங்களை வைத்துக்கொண்டு விவசாயத்தினை மேம்படுத்தி தன்னிறைவு பெற முடியாதிருக்கின்றோம். ஒன்றிணைந்த செயற்பாடுகள் இல்லாமையே இவற்றுக்கான காரணமாக இருக்கலாம் என்று விவசாய பொருளாதாரம் பற்றி குறிப்பிடும் கமநல சேவைகள் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர் குறிப்பிட்டமையும் இங்கே நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |