தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள கடும் தண்டனை
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான தேசத்துரோக மற்றும் கிளர்ச்சி வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சியோல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற 12 மணிநேர நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, தண்டனை தொடர்பான முக்கிய அறிவிப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால்
கடந்த 2024, டிசம்பர் 3ஆம் திகதி நள்ளிரவில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென ராணுவச் சட்டத்தை (Martial Law) அமுல்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்க முயன்றார்.

இருப்பினும், எம்.பிக்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலான போராட்டத்தால் சில மணிநேரங்களிலேயே இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, தற்போது சிறையில் விசாரணை எதிர்கொண்டு வருகிறார்.
அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களின்படி 2023 ஒக்டோபரிலேயே எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும், நாடாளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றவும் யூன் சதி செய்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் வடகொரியாவுடன் வேண்டுமென்றே மோதல் போக்கு மற்றும் ட்ரோன் நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டில் அவசர நிலையை உருவாக்க அவர் முயன்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் வாதங்கள்
அதேநேரம் தென்கொரியச் சட்டத்தின்படி, அரசுக்கு எதிரான கிளர்ச்சியை வழிநடத்திய குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தென்கொரியாவில் 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றாலும், சட்டப் புத்தகத்தில் அது இன்னும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

65 வயதான முன்னாள் ஜனாதிபதி யூன், உடல் மெலிந்த நிலையில் கறுப்பு நிற உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், "ஜனாதிபதி என்ற முறையில் நாட்டைப் பாதுகாப்பதற்கே நான் அந்த முடிவை எடுத்தேன்" என்று வாதிட்டு வருகிறார்.
இந்தநிலையில் சட்டத்தரணிகளின் வாதங்கள் முடியாத காரணத்தால், ஜனவரி 13ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி லீ ஜே மியுங் தலைமையிலான அரசாங்கம், இந்த வழக்கின் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam