அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு கடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற போராடி வரும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தும் அபாயத்தில் உள்ள இலங்கை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் இளைய மகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் பரிசீலிக்க மறுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 04 வயது சிறுமியின் சார்பாக மாத்திரமே மேல்முறையீடு செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அவரது தந்தை, தாய் மற்றும் மூத்த சகோதரி சார்பாக இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறையீடுகள் நிராகரிக்கப்பட்டமையினால் இறுதி முயற்சியாக 4 வயது சிறுமி சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது.
அதற்கமைய தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்த் தடுப்பு மையத்திலிருந்து அவரை நீக்குமாறு புதிய முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்கால சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக கடந்த ஜுன் மாதம் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அவர்களுக்கு மூன்று மாத தற்காலிக விசாவை வழங்கியிருந்தார்.
இலங்கையை சேர்ந்த பிரியா மற்றும் நடேஸ் போர் காலப்பகுதியில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில் அங்கு திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளை பெற்றனர்.
பல முறை நாடு கடத்தலை எதிர்கொண்ட போதிலும் மனித உரிமை அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்களுக்கமைய இறுதி நேரத்தில் நாடு கடத்தல் உத்தரவு தடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இளைய மகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் பரிசீலிக்க மறுத்துவிட்டமையினால் மீண்டும் இந்த குடும்பத்தினர் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.