ரஷ்யாவில் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவனுக்கு அநீதி! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, இலங்கையில் உள்ள மருத்துவ பீடமொன்றில் அனுமதி பெறுவதற்கு தகுதி பெற்றிருந்த மாணவர் ஒருவருக்கு அந்த வாய்ப்பை மறுக்கப்பட்டது.
இதன் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதற்கமைய, குறித்த மாணவரை இலங்கையிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
பொரளையைச் சேர்ந்த தம்சித் ஜயரத்ன எனும் மாணவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மாணவர் வெளிவிவகார அமைச்சு ஊடாக அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
உரிய தகைமைகள்
எனினும், உரிய தகைமைகள் பூர்த்தியாகவில்லை எனக் கூறி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்தத் தீர்மானமானது சட்டவிரோதமானது எனவும், இதன் மூலம் மாணவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்மானித்தது.
இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாணவரை உடனடியாக மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரரான மாணவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.
அவரது தந்தை இலங்கை விமானப்படையின் கெப்டனாக பணியாற்றிய நிலையில், ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் நியமிக்கப்பட்டார். இதனால் மாணவன் உட்பட குடும்பத்தினர் ரஷ்யாவிற்கு குடிபெயர்ந்தனர்.
ரஷ்யாவில் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கற்கும் பாடசாலையில் குறித்த மாணவர் கல்வி பயின்றார்.
அங்கு சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழை பெற்றார். இது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு நிகரான ஒரு தகுதியாகும்.