வட்டி வீதம் குறைகிறது! ரூபா உயர்கிறது - மகிழ்ச்சி வெளியிடும் ரணில்
கடந்த காலங்களை விட இன்று இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளது. வட்டி வீதம் குறைகிறது. இந்த பயணத்தை தொடர்ந்தும் செல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
எமக்கு மாற்றுத் தீர்வுகள் இல்லை. வேறு வழியிருந்தால் அதனையும் சொல்லுங்கள். பொய் சொல்லி காலம் கடத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் ஒரு நெருக்கடி நிலை வேண்டாம்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இப்போது உதவிகள் கிடைக்கின்றன. நாட்டை முன்னேற்ற வழி கிடைத்துள்ளது. நாட்டு மக்களைப் போலவே இளையோரின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இலட்சக் கணக்கில் இளையோர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது. நாம் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளின் நிலையை நாம் காண்கிறோம். அவ்வாறு ஏன் எம்மால் வாழ முடியாது. பொய்களை சொல்லிக்கொண்டிருந்தால் தான் இந்த நிலையில் இருக்கிறோம்.
2048 பற்றி நான் பேசிய போது எதிர்கட்சியினர் ஏளனமாக சிரித்தார்கள். ஆனால் தற்போதுள்ள இளைஞர்கள் 2048 ஆம் ஆண்டிலேயே ஐம்பது வயதை அடைவார்கள் என்பது எதிர்கட்சியினருக்கு விளங்கவில்லை.
நாட்டுக்கு இன்னும் பல முதலீடுகளை கொண்டு வர வேண்டும். தொழிற்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். ஹோட்டல்களைக் கொண்டுவர வேண்டும். நாம் வலுவடைய வேண்டியது அவசியம்.
இன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 85 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது. இந்த தசாப்தத்தின் இடைப்பகுதியில் அதனை 350 பில்லியன் டொலர்கள் வரையில் அதிகரிக்க வேண்டும். அதனை நான்கு மடங்காக அதிகரிக்கும் இயலுமை எம்மிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |