சுமந்திரனின் கருத்தை தூக்கியெறிந்த மாவை!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுவது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தவறானது என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதுள்ள நிலையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் வெளியில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்துத் தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடம் வினவியபோது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகளைத் (தமிழரசு, ரெலோ, புளொட்) வேறு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டுக்குச் செல்வதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முடிவு எதுவும் எடுக்கவில்லை.
அந்தக் கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, இது தொடர்பில் மற்றக் கட்சிகளுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து கருத்து பரிமாற்றங்கள் மாத்திரமே இடம்பெற்றன.
'சூம்' செயலி ஊடாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பங்கேற்றுவிட்டு இடைநடுவில் சென்றுவிட்டார். தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுப்போம்.
தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகத் தனித்துப் போட்டியிடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே போட்டியிடும். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளைத் (தமிழரசு, ரெலோ, புளொட்) தவிர வெளியில் உள்ள ஏனைய மூன்று கட்சிகளையும் (சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி) இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பதா என்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுப்போம்.
இந்த விவகாரம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த விவகாரம் தொடர்பில் என்னுடன் வந்து பேசியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனின் வீட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பின் போதும் தேர்தல் உடன்பாடு தொடர்பில் பேசியுள்ளோம். எனினும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் தேர்தல் உடன்பாடு தொடர்பில் முடிவு எடுப்போம் என்று மேற்படி மூன்று சந்திப்புக்களிலும் நான் திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.
இந்த விவகாரத்தை நாம் மிகவும் பக்குவமாகக் கையாள வேண்டும். அவசரப்பட்டு கருத்துக்களை எவரும் வெளியிடக்கூடாது” என்றார்.
உண்மைக்கு புறம்பான கருத்து
இதேவேளை, மேற்கூறப்பட்ட சுமந்திரனின் கருத்தை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு தீர்மானம் தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் குழு உறுப்பினர்கள் சகலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள்.
பின்னர் இறுதி தீர்மானத்தை தை மாதம்7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற உள்ள மத்திய குழு கூட்டத்தில் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதாகவும் அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
எந்த சூழ்நிலையிலும் மற்றைய தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் கூட்டணியாக உள்வாங்குவதில்லை என்ற முடிவு. இணைய வழி முறையில் நடத்தப்பட்ட அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
இணைய வழி முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்து பதினைந்து நிமிடங்களில் தனக்கு வேறு ஒரு கூட்டம் உள்ளதாக கூறி வேறு ஒரு கூட்டத்திற்கு சென்று விட்டார். இறுதிவரை அவர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை.
பொய்யான அறிக்கையை பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்பதை பொறுப்போடு கூறிக்கொள்கின்றேன் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.



