வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இலங்கை வீராங்கனை : ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.
வலைப்பந்தாட்ட போட்டி
இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார்.
2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும் இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |