இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பௌத்த பிக்குகளின் செயல்! தேரர்களோடு அநுரவின் அவசர சந்திப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் ஒரு தேசிய பேரழிவாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்துடன் அனைவரும் வலுவாக கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்
நாட்டைப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில், பௌத்த சாசனத்தையும் அதனுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள விழுமியங்களையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து பொலிஸ் மா அதிபர் இதன்போது விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதனை முழு பிக்கு சமூகத்தின் செய்தியாகக் கருதிச் செயற்படுமாறு மகா சங்கத்தினர் அரசாங்கத்திடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல், தற்போதைய சவால்களுக்கு மத்தியில் பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பது பிக்குகளால் மட்டும் மேற்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்றும், அதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

புத்த சாசனத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், மூன்று பீடங்களின் மகா சங்கத்தினர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

