மத்திய அதிவேக வீதியின் பணிகளை ஆரம்பிக்க மீண்டும் சீனாவை நாடும் இலங்கை அரசாங்கம்
மத்திய அதிவேக வீதியில், கடவத்த - மிரிகம இடையேயான 35 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியை, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிப்பதற்காக, சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் (எக்ஸிம் வங்கி) அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒப்பந்ததாரரான MCC என்ற சீன கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை அரசாங்கம் 45.9 பில்லியன் ரூபா கடன்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அதிவேக வீதிப் பணிக்காக இந்த ஆண்டு பாதீட்டில் 81 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணத்தில் ஒரு பகுதி நிலுவைத் தொகையைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து, அதே சீன நிறுவனம் பணியைத் தொடரும் வகையில், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கம் ஒரு கிலோமீட்டருக்கு 11.2 பில்லியன் என்ற அளவில் குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், ஒரு கிலோமீட்டருக்கு 10.7 பில்லியன் ரூபா என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். என்ற போதும் சீன எக்ஸிம் வங்கியின் பதில் இதுவரை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
