கச்சத்தீவை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யக்கூடாது..! இலங்கை மீனவர் சங்கம் கண்டனம்
கச்சத்தீவை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனிமேல் அரசியல் செய்யக்கூடாது என இலங்கை மீனவர் சங்கச் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று(08.10.2026) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வட மாகாண கடற்றொழில் இணையத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய மீனவர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சரை சந்தித்திருந்தோம்.
சட்டவிரோத மீன்பிடிக்கு கண்டனம்
சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எமது பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை அமைச்சருடன் பகிர்ந்துகொண்டோம். தற்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து கடற்றொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தையும், அதன் பின்னர் அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.
அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலின் போது கடல் வளங்களைப் பாதுகாத்தல், சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் ஏனைய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டையும் அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.
இந்த விடயத்தில் வட மாகாண கடற்றொழில் இணையம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. இதனைத் தவிர, பல்வேறு அமைப்புகளும் கடற்றொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றன.
இந்திய உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
இந்திய கடற்றொழிலாளர்களின் இந்த அத்துமீறிய வருகை தொடர்பிலும் பல அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய உயர் நீதிமன்றத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் எடுத்த இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, கடற்றொழிலாளர்கள் சார்பில் எங்களுடைய மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிமேல் கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல்வாதியும் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan