இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி..
இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனவரி 3ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ் கடல் மீன்பிடிப்புக்காக புறப்பட்ட கடற்றொழிலாளர்கள் குழுவை இந்திய கடற்படை கப்பல்கள் பரிசோதனை செய்வதாக கூறி கடற்றொழிலாளர்களை தடிகளை கொண்டும், காலால் உதைத்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடுக் கடலில் நடந்த சம்பவம்
இந்தத் தாக்குதல் குறித்து கடற்றொழிலாளர்கள் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, இலங்கை கடற்படை அதிகாரிகள் நேற்றுக் காலை காயமடைந்த கடற்றொழிலாளர்களை தெற்கு கடற்படைத் தளத்திற்குக் கொண்டு வந்து கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாரவிலவில் உள்ள குடமடுவெல்ல, துடுவ மற்றும் இஹல மஹாவெவ பகுதிகளைச் சேர்ந்த நான்கு கடற்றொழிலாளர்களே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்களில் தெரியவந்துள்ளது.