இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் இந்திய கடற்பரப்பில் கைது
இலங்கைக்கு இராமேஸ்வரம் - மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி செல்வதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 8 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
கடல் பகுதியில் உளவு பணி ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான 4 படகுகளையும், அதில் இருந்த 8 பேரையும், அதேபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு படகையும் அதிலிருந்த 4 பேரையும் இந்திய கடலோர பொலிஸார் மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிரமாக விசாரணை செய்துள்ளனர்.
இந்திய கடலோர பொலிஸார்
குறித்த எட்டு கடற்றொழிலாளர்களும் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களிடம் இருந்து ஒரு தொகை உலர்ந்த கடலட்டை மற்றும் மஞ்சள் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் கடத்திய தங்கத்தை மண்டபத்தை சேர்ந்தவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து சமையல் மஞ்சள் மற்றும் கடல் அட்டை வாங்கி செல்ல நடுக்கடலில் காத்திருந்த போது பிடிப்பட்டனரா என்ற கோணத்தில் இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.