அரசாங்கத்தை சிக்கலுக்குள் தள்ளிய IMF ஒப்பந்தம்..! அதிகரிக்கவுள்ள வரிச்சுமை
இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீத இலக்கு வருவாயை அடைவது சவாலாக மாறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களால் அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது தவணையை இழக்காமல் இருக்கவும், ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடையவும் அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டு வருவாய்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இரண்டு காரணிகளால் அதன் வரவு - செலவு கொள்கை வகுப்பில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்று, முந்தைய அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தை எந்த திருத்தமும் இல்லாமல் செயல்படுத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டாவது, புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்பு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்றச் சட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தை தயாரிக்கும் போது சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் பல அளவுகோல்களை நிறைவேற்ற வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தின் கீழ் உள்ள தேவைகளில் ஒன்று, இலங்கை 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 சதவீத அரசாங்க வருவாயைப் பெற வேண்டும் என்பதாகும். இது சுமார் 5.5 ட்ரில்லியன் ரூபா ஆகும். அது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய இலக்கு.
புதிய வரிகள்
எனவே, மக்கள் மீது புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படாமல், அரசாங்கம் இந்த நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அரசாங்கத்தால் இந்த நிலையை அடைய முடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு வழங்கப்படாது. இது பொருளாதார மாற்றச் சட்டத்திற்கும் இணங்காததாக இருக்கும்.
அது மாத்திரமன்றி, முந்தைய அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சில சர்ச்சைக்குரிய வரிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சொத்து வரி. இப்போது இந்த வரி தற்போதைய அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் வருவாய் இழப்பு காரணமாக அதே வருவாயை உயர்த்த புதிய வரியை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.
ஆகையால், இந்தக் காரணங்களால், வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க முடியாது, ஏனெனில் அது அதன் வரவு - செலவு திட்ட கொள்கையை சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)