20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை: 11 பேருக்கு மரண தண்டனை
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பதினொரு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை
அவர்கள் 11 பேரும், 2004 மே 29 ஆம் திகதியன்று, ஊவா பரணகமவில் உள்ள கலஹகமவைச் சேர்ந்த வாதுவ பொன்சுகே பந்துல ஜெயவர்தன திசேரா என்ற 23 வயதான இளைஞரை அடித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
முன்னதாக சட்டமா அதிபர் 13 பேர் மீது குற்றம் சுமத்தியிருந்தார் எனினும், முதல் பிரதிவாதி சேனக ரஞ்சித் பிரேமரத்ன, குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஏழாவது பிரதிவாதியான ஆர்.பி.கே. பத்திரன மேல் நீதிமன்ற விசாரணையின் போதே இறந்துவிட்டார், பன்னிரெண்டாவது பிரதிவாதியும்; வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு சாட்சியத்தின்படி, முதல் குற்றவாளிக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தனிப்பட்ட பிரச்சினையே மரணத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தநிலையிலேயே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.