கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகள்!
வடக்கு கடற்பரப்பில், அண்மையில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்களில், இரண்டு இலங்கை வம்சாவளியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, குறித்த இருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1997ஆம் ஆண்டு யுத்தம் உச்சக்கட்டத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நாட்டவர்களான இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.
கடற்படையினரால் கைது
இந்தநிலையில் குறித்த இரண்டு இலங்கையர்களும் இந்திய இயந்திரமயப்படுத்தப்பட்ட இழுவை படகில் சென்று தினக்கூலிகளாக பணிபுரிந்து கொண்டிருந்தபோதே, கடந்த ஜூன் 22 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தியர்களுக்கு எதிராக எல்லைத்தாண்டிய சட்டவிரோத மீன்பிடிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் பொதுவாக குறுகிய காவலில் இருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு இரண்டு வருட கடுங்காவல் சிறைத்தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள்.
தண்டனை குறித்து எதிர்ப்பார்ப்பு
மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு இலங்கையில் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த இரண்டு இலங்கையர்களைத் தவிர கைது செய்யப்பட்ட ஏனைய இந்திய கடற்றொழிலாளர்கள் அனைவரும் ஜூலை 18ஆம் திகதிக்குள் விடுவிக்கப்பட உள்ளதாக திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இலங்கையர்கள் இருவருக்கும் வழங்கப்படும் தண்டனை குறித்து எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |