வெளிநாட்டிலிருந்து வங்கிக்குள் விளையாட்டுக் காட்டிய இலங்கையருக்கு நேர்ந்த கதி
நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
சந்தேக நபர் கைது
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேனுக சச்சிந்த என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரச வங்கி தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளரால் 2022 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
வங்கியின் கம்பஹா கிளையின் பல வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பல குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கணக்குகளில் பணம் எதுவும் வரவில்லை எள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
விசாரணை அதிகாரிகள்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கியின் தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளர் முறைப்பாடு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வங்கியின் கணினி அமைப்பை அணுகி அந்த குறுஞ்செய்திகளை அனுப்பிய நபர் குறித்து நீண்ட விசாரணை நடத்தியதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் எனவும் அவர் கணினி தரவுத்தளம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் யாருடைய கணக்குகளிலிருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
