ஐ.நா. அமைதி காக்கும் பணியில் மீண்டும் இலங்கை இராணுவம்! பத்து ஆண்டுகளின் பின் வாய்ப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு பத்து ஆண்டுகளின் பின் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான ஹைட்டியில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப்பிரிவில் இலங்கை இராணுவத்தினர் விரைவில் மீண்டும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலின் பிரகாரம் பொலிஸ் மற்றும் ராணுவத்திலிருந்து சுமார் 900 வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை ஹைட்டியில் நிலைநிறுத்த இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள்
அதற்கான தகுதியான நபர்களை பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் அவர்களை ஹைட்டிக்கு அனுப்பும் தேர்வு செயல்முறை மேற்கொள்ளப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் அல்லது பிற குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வது இலங்கை அரசின் பொறுப்பாகும்.
10 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த அமைதி காக்கும் படையினரை அனுப்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமைதி காக்கும் பணி
ஹைட்டியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2015இல் இலங்கை தனது பணிகளை முடித்துக் கொண்டது.

2004 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 16,000-க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் ஹைட்டியில் பணியாற்றியிருந்தனர்.
ஹைட்டியில் நடந்த நடவடிக்கைகளின் போது ஆறு இலங்கை ராணுவத்தினர் தங்கள் உயிர்களை இழந்திருந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.