அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவிய இரு இராணுவ அதிகாரிகள் கைது
மனித கடத்தல் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை வீரர் ஆகியோர், கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற்றத்துக்கு உதவும் நோக்கில் பலரிடம் இருந்து 7 மில்லியன் ரூபாய்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம்
2022,டிசம்பர் 04ஆம் திகதியன்று, திருகோணமலையில் உள்ள சம்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த 25 பேர் கொண்ட குழுவின் சட்டவிரோத குடியேற்ற முயற்சியை இலங்கை கடற்படை முறியடித்தது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக, கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களில் நடத்தப்பட்ட விசாரணையின் போதே இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை வீரர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் குழுவிற்கு கடற்படைச் வீரர் ஒரு படகை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |