வெறிச்சோடிக் காணப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் : திண்டாடும் பயணிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்படவிருந்த மூன்று ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த MH 178 விமானமும், காலை 7.25 மணிக்கு இந்தியாவின் ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் UL 177 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலை 8.55 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகருக்குச் செல்ல வேண்டிய UL 181 என்ற விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சிக்கல் நிலை காரணமாக நேற்று 7 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் தொடர் விமான தாமதம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த காலதாமதத்தால், தாய்லாந்தில் புனித யாத்திரை சென்ற மக்கள் குழுவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்னும் சில நாட்கள் ஆகும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அத்துல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.