நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தைப்பொங்கல் பண்டிகை!
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக் காட்டான தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது.
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக மலர்ந்திருக்கும் இந் நாள் நாடளாவிய ரீதியில் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
ஹட்டன்
உழவர்களின் திருநாளான தைபொங்கல் பண்டிகையினை முன்னிட்டு நாட்டிக்கும் வீட்டிக்கும் சௌபாக்கியம் வேண்டிய ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று (14) அதிகாலை சூரியப் பொங்கல் மிக சிறப்பாக நடைபெற்றது.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, விநாயகர் வழிபாடு இடம்பெற்று சூரிய பகவானுக்கு பால் பொங்கல் வைத்து அலங்கார, பூஜைகள் நடைபெற்று மலர்களால் அர்ச்சனை செய்து நாட்டிக்கும் வீட்டிக்கும் சௌபபாக்கியம், சாந்தி ,சமாதானம் ஆகியன வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு விசேட பூசை வழிபாடுகள் திருகோணமலை காளி கோவிலில் நடைபெற்றது.
காளி கோவில் தேவஸ்தான இராவிச்சந்திர குருக்களினால் விசேட பூசைகள் நடைபெற்றன.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பூசை வழிபாடுகள் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : முபாரக்
வவுனியா
வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம் , நகர் பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கியதுடன் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
அத்துடன் குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
செய்திகள் : திலீபன்
யாழ்ப்பாணம்
சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கண்டிய நடனம்,பொய்க்கால் குதிரையாட்டம் மயிலாட்டம், நாதேஸ்வர மேளதாளங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது பொங்கல் பானையில் விருந்தினர்களால் அரிசி போடப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு பெளத்த பாரம்பரிய முறைப்படி கண்டிய மேள தாளங்கள் முழங்க நடைபெற்றது. நிகழ்வுகளின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் நிகழ்வு மண்டபத்தின் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் நாவற்குழி சந்தியில் இன்று காலை பொங்கல் விழா இடம்பெற்றது.
நாவற்குழி இளைஞர்களால் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பொங்கல் விழா இந்த வருடமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
தமிழர் திருநாள் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் (14) தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தினர்.
விசேடமாக கத்தோலிக்க தேவாலயங்களிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர். முல்லைத்தீவு இராஜப்பர் தேவாலயம் ,முல்லைத்தீவு தீர்த்தகரை வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவற்றில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
முல்லைத்தீவில் வீதி ஓரங்களில் பொது இடங்களிலும் இராணுவத்தினர் பொங்கல் வாழ்த்து பதாதைகளை காட்சி படுத்தியிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) உழவர் திருநாளான தைபொங்கல் திருநாள் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட காரியாலயத்தில் இன்றைய தினம் சூரியனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினால் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு ஆரையம்பதியில் சர்வமத தைப்பொங்கல் விழா ஆரையம்பதி சிகரம் புகலிடம் மண்டபத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மண்முனைப் பற்று ஆரையம்பதி சர்வமத அமைப்பினரால் சர்வமத தைப்பொங்கல் விழா இன்று இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தைப்பொங்கல் இடம் பெற்றதுடன் புகலிடம் மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் சமதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் பொருட்டு இவ்வாறான நிகழ்வுகளை மட்டக்களப்பு பல்சமய ஒன்றியம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையகம்
ஹட்டன் பகுதியில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணசந்திராணந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : திருமால்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் தேத்தாத்தீவு புனித யூதாதையு திருத்தலத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று (14) காலை 6.30 மணியளவில் திருப்பலி பூசை இடம்பெற்றது.
திருத்தலத்தின் குரு நிர்மல் சூசைராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலி பூசையில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
களுவாஞ்சிகுடி
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் காலை 7 மணியளவில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
செய்திகள் : ருசாத்
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் நிகழ்வும் விசேட பூஜையும் நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார்களுடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
செய்திகள் : குமார்