தென்னிலங்கையில் திருமணம் செய்வதாக ஏமாற்றப்படும் பெண்கள்
ஹோமாகம பிரதேசத்தில் பத்திரிகை விளம்பரம் மூலம் மணமகள் தேவை என வெளியிட்டு பெண்களிடம் காதல் உறவுகளைப் பேணி, அவர்களை ஏமாற்றும் நடனக் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி அவர்களின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் சொத்துக்களை மிக நுணுக்கமாக கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்களை ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருமணம்
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு திரும்பி வராத நபர் தொடர்பில் ஹோமாகம பொலிஸாருக்கு அண்மையில் இரண்டு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் பஸ் நிலையத்திற்கு அருகில் நிற்பதாக ஹோமாகம பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அஜந்த பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.
ஹோமாகம மற்றும் மொரகஹஹேன பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகைகள் கொள்ளை
விசாரணையின் போது ஹொரணை, மஹரகம மற்றும் ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு இடங்கள் உட்பட நான்கு இடங்களில் பெண்களை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து 15 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விளம்பர்களை நம்பி ஏமாறும் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது