நுவரெலியாவில் அடை மழை: வெள்ள நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்(Photos)
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா - கந்தபளை பகுதியில் உள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ - நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் காரணமாக சில வீதிகள் சேதமடைந்துள்ளன.
விபத்தினை எதிர்கொள்ளும் நிலை
சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலை காணப்படுபவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக உடப்புசல்லாவ , ராகலை , கந்தபளை நகரில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தபளை பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக விவசாய காணிகள் வெள்ளத்தினால் மூழ்குவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |